Tuesday, July 29, 2025

போராட்டம் இல்லை என்றால் வாழ்க்கையா

போராட்டம் இல்லை என்றால் வாழ்க்கையா  

இதை ஏற்காதவன் யாரும் மனிதனா  

இளம் போராளியே உன்னைப் பாடாதவன் 

உலகம் காணாதவன் போல் வாழும் ஏனைய்யா



பால் மணக்குது தேன் மணக்குது

குடம் குடமாய் பேச்சிலே

ஊர் மனதில் கூன் விழுகின்ற காட்சியா நாட்டிலே


தேள் கடியதனால் வலியென

யார் இருப்பார் வீட்டிலே

தா மருந்தென வலி குறைந்திட

கால் நடந்திடும் ரோட்டிலே



தலை விதியென அவன் செயலென

தெய்வத்தின் மேல் நிந்தனை

எது சரியென எது தவறென

அறிவதன்றோ சிந்தனை


பொது வழியென விதியிருப்பதை மறுதலித்தால் தண்டனை

தனி வழியென தடம் புரள்பவன்

மனிதனில்லை நண்பனே



தாய் மடியில் சேய் அழுவது

பால் அருந்திட அல்லவோ

மான் கொம்புகள் கூர் வாளென

இருப்பதை நான் சொல்லவோ


ஏர் முனையிலும் தீ பரவுது

பார் சமுத்திர வீதியை

ஏன் எதற்கிந்த போர் நடக்குது

கேள் உன் மன நீதியை


எழுத்து இசை 

இ மு வெற்றிவளவன்

விடுதலை போரினில் வீழ்ந்த மலரே

விடுதலை போரினில் வீழ்ந்த மலரே

தோழா தோழா

வீரர் உமக்கே வணக்கம் வணக்கம்

தோழா தோழா


காரிருள் சூழ்ந்த கரிய வானத்தில் 

தாரகை போன்று ஜொலித்து நிற்கின்றீர்

போரிடும் எமக்கு புத்துயிர் தாரீர்

தோழா தோழா


இந்திய நாட்டின் விடுதலைப் போரில்

எண்ணற்ற வீரரை அர்ப்பணம் செய்தோம்

இதய கனவுகள் ஈடேறும் சத்யம்

தோழா தோழா



ஆயிரம் ஆயிரம்  தோழர்கள் ரத்தம்

குடித் கொழுந்தே நிற்கும்

கோரச் சமூகம்

தகர்த்தெறிவோம் மக்கள் சக்தியினாலே

தோழா தோழா

விடியும் போது விடியட்டும்

விடியும் போது விடியட்டும் என்று

விதியை எண்ணி கிடப்பவனே

விழிகள் இரண்டும் திறந்து கிடந்தும்

வழிகள் தவறி நடப்பது ஏன்


மானினங்கள் புலிகளுக்கஞ்சும்

மயிலனங்கள் நரிகளுக்கஞ்சும் மனிதன் மட்டும் மனிதனுக்கஞ்சும்

நிலை ஏனடா

மண்டியிட்டு இறைவனை கெஞ்சும்

வேதம் கோடி ஏந்திய நெஞ்சும் 

வானம்பாடி இனங்களுக்கு இங்கே

கிடையாதடா

ஈரும் பேனும் வாழும் ஓட்டில்

ஈசன் எழுத்து இருக்கிறது என்று

ஏய்ச்சு பிழைக்கும் எத்தர்களாலே

ஏழ்மைக்கு என்ன தீர்வினை கண்டாய்

   - விடியும் போது


நாட்டு நடப்பு நன்மை தீமை

நாளும் சொல்லும் செய்தி தாளில்

ராசி பலனை தேடுவதேனோ

என் என் நண்பனே

கூட்டு சிறையின் கிளிகள் தந்த

ஏட்டு சுவடி படிப்பதனாலே

வாழ்க்கை உனக்கு வசப்படுமோடா

என்றென்றுமே

கருப்பு பூனை குறுக்கே வந்தால்

நடப்பு தவறு என்று நினைப்பாய்

அடுப்பில் பூனை தூங்கக் கண்டால்

அதற்கும் சிவனை நொந்து சிரிப்பாய்

  - விடியும் போது 


சுட்ட பின்னும் சுடு நெருப்பாலே

சுட்டுக் கொள்ளும் சூட்சுமம் கண்டு

சூளையிட்ட செங்கல் ஆனாய் உன் வாழ்விலே

வெற்றி பெற்ற மனிதருக்கெல்லாம்

பக்கத்துணை ஜோசியமல்ல

பட்டதுக்கு பலனை கண்டார் உழைப்பின் பேரிலே

ஒன்றுபட்டு உழைத்தோர் எல்லாம்

குன்றி லிட்ட விளக்காய் ஆனார்

மாண்புமிக்க தத்துவம் கண்டு

மனித வாழ்வின் சாட்சிகள் ஆனார்

  - விடியும்போது


எழுத்து, இசை

இ மு வெற்றிவளவன்


கண்ணுக்கு எதிராக நடக்கிறத பார்த்து

கண்ணுக்கு எதிராக நடக்கிறத பார்த்து 

கவலைப்படாதவன் மனுஷன் இல்லை

காதுக்குள்ள செய்தி வந்த பின்னும் அதை

கவனிக்க மறுப்பது ஞாயம் இல்லை

பல்லும் சொல்லும் இருந்தும் பேசாதவன் முகத்தில் 

பள்ளமாய் இருப்பது வாயும் இல்லை


கோயில் இல்லாத ஊரு குடியிருக்க ஆகாதுன்னு

கொண்டாட்டம் போட்டு அதை கட்டுறோம் பத்து

பஞ்சாங்கம் பார்த்து முடிவு கட்டுறோம் இங்கே

கவலையும் தொலையில் கண்ணீரும் குறையல 

கட்டிவச்ச கோயிலிலே முட்டுமறோம் - இன்ப

கனவு உலகத்திலே சொக்குறோம்

கோட்டையாட்டம் கோயில் இருந்தும்

சனங்க குடியிருக்க முடியலப்பா 

செக்குமாடு போல நடக்கறியே போகும்

திக்குத் தெரியாம முழிக்கிறியே



யமுனை ஆற்றங்கரையில்

யவனமாய் கொலுவிருக்கும்

தாஜ்மஹால் இந்தியாவின் சின்னம் தான் - மதுரை

ஆயிரம் கால் மண்டபமும் சின்னம்தான் அஜந்தா

எல்லோரா ஓவியமும் குதுப்பினார் கோபுரமும் பாரதத்து பண்பாட்டு சின்னம்தான் அதுவே

மாமல்லன் சிற்பங்களும் ஒண்ணுதான்

அக்பருக்கும் கோட்டை இருக்கும் 

கௌதமராம் புத்தருக்கும் வாழ்க்கை இருக்கும்

இதுக்கு பேரு தாண்டா இந்திய நாடு - இது

இல்லாட்டி நமக்கு இங்கே ஏதுடா பேரு


ஆத்தா உன் சேலை

ஆத்தா உன் சேலை ஆகாயத்தை போல

தொட்டில் கட்டி தூங்க தூளி கட்டி ஆட

ஆத்துல மீன் புடிக்க அப்பனுக்கு தலை துவட்ட

பார்த்தாலே சேர்தணைக்க தோணும் - நான் செத்தாலும் என்னை போத்த வேணும்.


நான் இடுப்பிலே கட்டிகிட்டு நீச்சல் பழகினதும்

உன் சேலை தானே வண்ண பூஞ்சோலதானே

வெறும் தரை விரிப்பில நான்  படுதகிடந்ததுவும் 

உன்சேலை தானே வண்ண பூஞ்சேலைதானே

ஈர சேலை காயும்போது வானவில்லா தெரியும்

இத்து போன சேலையிலே உன் சோக கதை புரியும் 

கஞ்சி கொண்டு போகையிலே சும்மாடா  - இருக்கும் - உன்

சேலை கட்டி இறைச்ச தண்ணி சக்கரையா இனிக்கும் (2) - ஆத்தா உன் சேலை


அக்கா கட்டி பழகினதும் ஆடு கட்டி மேச்சதுவும்

உன் சேலை தானே வண்ண பூஞ்சோல தானே

வெக்கையில விசிறியாகும்

வெயிலுக்குள்ள குடையாகும் 

உன் சேல தானே வண்ணப் பூஞ்சோலைதானே

பொட்டிக்குள்ள மடிச்சு வெச்ச

அழகு முத்து மாலை

காயம்பட்ட விரல்களுக்கு

கட்டு போடும் சேலை

மயிலிறகா உன் சேலை

மனசுக்குளே விரியும்

வெளுத்த சேலை திரி

வெளக்கு போட்டா எரியும்.(2)

ஆத்தா உன் சேலை....


எங்களை தெரியலையா

எங்களை தெரியலையா -  எங்கள்

இசையை புரியலையா

திங்கள் ஒளியினில் துயில்வோரே - தினம்

சூரிய தீயினில் உழைப்போரே


இமயமும் குமரியும் அல்லாமல்

எங்கும் பரவி நிற்போம் - நாங்கள்

மனித இனத்திற்கென்றே 

நாங்கள் புனைந்த கவிதையை

கண்டங்கள் ஐந்திலும்

பாடி நிற்போம்

ஜாதி மத இன பேதம் கடந்திட்ட 

சத்திய புத்திரர்கள் - நாங்கள்

சரித்திர பின்னலின் சங்கமங்கள்


ஜாரென்னும் அரக்கனை வேரறுத்த

சம்மட்டி அரிவாள்கள் - நாங்கள்

இந்த சரித்திர நரம்பு மண்டல

மையத்தின்

தத்துவ மருத்துவர்கள்

பாசிச இட்லரின் கூலி படைகளை 

பனிமலை மீதினில் வென்றவர்கள்

பாட்டாளி ஆட்சியை முதல் முதல் மண்ணில்

படைத்திட்ட புரட்சி விஞ்ஞானிகள்


ஆன்மபலம் உள்ள மானிடரே - எங்கள்

அணிவகுப்பை சற்று பாருங்கள்

அமெரிக்க ஆதிக்கம் பின் வாங்க

வியட்நாம் வென்றதை கூறுங்கள்

பூமியின் முகத்தை உழைப்பால் மாற்றிடும்

புரட்சி புயலின் சின்னங்களே

நம் போர் இன்னும் முடியவில்லை (5)

இந்த பூமி முழுவதும் விடியும் வரை.